லக்னோ: உத்தர பிரதேசத்தில் உள்ள அனைத்து கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களிலும் மாணவர்கள் சீருடை அணிவதை கட்டாயமாக்க வேண்டும் என கவர்னர் ஆனந்திபென் படேல் உத்தரவிட்டுள்ளதாக லோக் பவன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லோக் பவனில் நடைபெற்ற பல்கலை துணைவேந்தர்கள் கூட்டத்தில், மாநில பல்கலைகளின் வேந்தராக உள்ள ஆனந்திபென் படேல் தலைமையில் இந்த முடிவு குறித்து ஆலோசிக்கப்பட்டதாக அறிக்கை கூறுகிறது. மாணவர்களிடையே சமத்துவ உணர்வை உருவாக்குவதே இதன் நோக்கம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த உத்தரவு, பல்லியாவில் உள்ள ஜனநாயக சந்திரசேகர் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மாணவர்கள் தன்னம்பிக்கை பெறவும் வேலைவாய்ப்புக்கு தகுதி பெறவும் தொழிற்கல்வி மற்றும் திறன் சார்ந்த பாடங்களை அறிமுகப்படுத்த வேண்டும்; கூடுதல் வருமானத்திற்காக தங்கள் சொந்த நிலங்களில் இயற்கை விவசாயம் செய்ய மாணவர்களை ஊக்கப்படுத்த வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

மாணவியர் விடுதிகளின் நிலையை மேம்படுத்தி, அவை சமூக விரோதச் சூழல்களில் இருந்து விலகி இருப்பதை உறுதி செய்ய வேண்டும்; தேசிய கல்விக் கொள்கையை திறம்பட செயல்படுத்தி, பாடத் தேர்வில் மாணவர்களுக்கு உரிய சுதந்திரம் வழங்க வேண்டும்; முக்கிய பாடங்களுடன் யோகா, ஓவியம் உள்ளிட்ட திறன்களையும் கற்றுக்கொள்ள வழிவகுத்தால் வேலைவாய்ப்பு மேம்படும் எனவும் அறிக்கை வலியுறுத்துகிறது.