அதிமுக எம்எல்ஏ எஸ்.பி. வேலுமணி, கட்சிக்குள் பிளவு ஏற்பட்டுள்ளதாக பரவும் தகவல்களை மறுத்தார். சில கருத்து வேறுபாடுகள் மட்டுமே உள்ளன என்றும், சிலர் அதிமுகவை எதிர்மறையாக சித்தரிக்க முயற்சிக்கின்றனர் என்றும் அவர் கூறினார்.

தவெக அமைச்சரவையில் பதவி ஏற்றவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த அவர், தங்கள் தரப்பு அமைச்சர் பதவிகளை எதிர்பார்த்ததாக கூறப்படும் விமர்சனங்களை நிராகரித்தார். தவெகவிடம் அமைச்சர் பதவி கேட்டதாக தங்கள் அணியில் யாரும் கூறியதில்லை என்றும், ஆதரவு அளித்த காரணத்தை ஏற்கனவே விளக்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.

தவெக மக்களின் நம்பிக்கையை பெற்றுள்ளதாக தாங்கள் கருதுவதாலேயே ஆதரவு வழங்கியதாக வேலுமணி கூறினார். ஆனால் ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் தவறான எண்ணங்கள் பரப்பப்படுவதாகவும், சட்டசபையில் ஆதரவு தெரிவிக்கும் போது பதவிக்காக அதிமுகவில் இருந்து பிரிந்ததாக தவறாக சித்தரிக்கப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

அதிமுக தேர்தலில் தோல்வியை சந்தித்ததை ஏற்றுக்கொண்ட அவர், “அன்றும் இன்றும் இபிஎஸ் தான் கட்சியின் பொதுச் செயலாளர்” என்று மீண்டும் வலியுறுத்தினார். தோல்வி எப்படி வந்தது, அதை எப்படி சரி செய்வது என்பதையே தாங்கள் ஆய்வு செய்ததாகவும் கூறினார்.

மேலும், கட்சி அலுவலகத்தை முற்றுகையிடுவது அல்லது கைப்பற்றுவது போன்ற திட்டங்கள் இருப்பதாக பரவும் தகவல்களை அவர் பொய்யென மறுத்தார். கட்சியை வலுப்படுத்தி ஜெயலலிதாவின் ஆட்சியை மீண்டும் கொண்டு வருவதுதான் தங்கள் இலக்கு என்றும் அவர் தெரிவித்தார்.