சென்னை: கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், ரயில் ஓட்டுநர் அறைகளில் ஏசி வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க அனைத்து மண்டலங்களுக்கும் ரயில்வே வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
ரயில்வேயில் ‘லோகோ பைலட்’ எனப்படும் ரயில் ஓட்டுநர்கள் சுமார் 60,000 பேர் பணிபுரிகின்றனர். கடும் வெப்பம் காரணமாக பணிநேரத்தில் உடல் சோர்வு ஏற்படும் அபாயம் இருப்பதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, அனைத்து ரயில்களின் ஓட்டுநர் அறைகளிலும் ஏசி வசதியை அமைத்து முழுமையாக செயல்படுத்த வேண்டும் என ரயில்வே தொழிற்சங்கங்கள் கடந்த வாரம் கோரிக்கை விடுத்தன.
ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், புதிதாக அறிமுகமாகும் விரைவு மற்றும் மின்சார இன்ஜின்களில் ஓட்டுநர் அறைகளில் ஏசி வசதி ஏற்கனவே உள்ளது. மீதமுள்ள சில பழைய இன்ஜின்களிலும் ஓட்டுநர் அறைகளில் ஏசி வசதி ஏற்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன என்றனர்.





