சென்னை: இரவு 10:05 மணிக்கும் டாஸ்மாக் கடைகள் அல்லது குடி மையங்கள் திறந்திருந்தால், அதற்கான கண்காணிப்பு பொறுப்பில் உள்ள சப்-இன்ஸ்பெக்டர்கள் (எஸ்.ஐ.) மற்றும் இன்ஸ்பெக்டர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு டிஜிபி சந்தீப்ராய் ரத்தோட் உத்தரவிட்டுள்ளார்.
போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், டாஸ்மாக் கடைகள் மற்றும் குடி மையங்கள் மதியம் 12 மணிக்கு திறந்து, இரவு 10 மணிக்குள் மூடப்பட வேண்டும். ஆனால் மாநிலம் முழுவதும் குறிப்பிட்ட நேரத்தில் மூடப்படுவதில்லை என்ற புகார்கள் எழுந்துள்ளதாக தெரிவித்தனர்.
இதனால் சட்டம்-ஒழுங்கு பிரச்னைகள் ஏற்படும் அபாயம் இருப்பதால், கடைகள் மற்றும் குடி மையங்கள் நேரக்கட்டுப்பாட்டை பின்பற்றுகிறதா என்பதை போலீசார் கண்காணித்து வருகின்றனர். இதற்காக இடம், தேதி, நேரத்துடன் கடை முன் ‘செல்பி’ எடுத்து அனுப்ப வேண்டும் என்ற உத்தரவும் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதாக கூறினர்.
மண்டல ஐ.ஜி.க்கள் மற்றும் மாவட்ட எஸ்.பி.க்களுக்கு அனுப்பிய சமீபத்திய உத்தரவில், இரவு 10:05 மணிக்கும் கடை திறந்திருந்தால், கண்காணிப்பு பொறுப்பிலுள்ள எஸ்.ஐ.க்கள் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டிஜிபி குறிப்பிட்டுள்ளார்.
மேலும், டாஸ்மாக் கடைகள் அருகே அல்லது குடி மையங்களில் சட்டவிரோத மது விற்பனை நடந்தால், சம்பந்தப்பட்ட இன்ஸ்பெக்டரை இடைநீக்கம் (சஸ்பெண்ட்) செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.





