சென்னை: பெண்களை குறிவைத்து இழிவுபடுத்தும் வகையில் தவறான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டால், புகார் அளிக்கும் பட்சத்தில் காவல் துறை கடும் நடவடிக்கை எடுக்கும் என பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா எச்சரித்தார்.
பேட்டியில் அவர், தேர்தல் முடிந்த பின் கூட்டணி தொடர்பான முடிவுகளை அந்தந்த கட்சிகளின் தலைமைதான் எடுக்கும் என்றும், எந்தக் கட்சியும் தி.மு.க.க்கு “அடிமை சாசனம்” எழுதி கூட்டணி அமைக்கவில்லை என்றும் கூறினார். தேர்தல் தோல்வியை ஆய்வு செய்ய 36 பேர் குழு அமைத்தும், ஏன் தோற்றோம் என்பதை தி.மு.க. இன்னும் புரிந்துகொள்ளவில்லை எனவும் விமர்சித்தார்.
அரசியல் கூட்டணியை பாலியல் உறவுடன் ஒப்பிட்டு முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராஜா கருத்து தெரிவித்ததாகக் கூறிய அமைச்சர், தி.மு.க. துணை பொதுச்செயலராக உள்ளவர் இவ்வாறு பதிவிட்டது சரியல்ல என்றும், அந்த வார்த்தைகள் திருமாவளவன் மற்றும் வி.சி.க. தொண்டர்களை காயப்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார். இதற்காக ஆ.ராஜா மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தினார்.
மேலும், பெண்கள் உரிமைக்காக குரல் கொடுப்பவர் எனக் குறிப்பிடப்பட்ட தி.மு.க. துணை பொதுச்செயலர் கனிமொழி இதற்கு எப்போது குரல் கொடுப்பார் எனத் தெரியவில்லை என்றும் அவர் கூறினார். தமிழகத்தில் த.வெ.க. அரசு உருவாக பெண்கள் முக்கிய பங்காற்றியதாகச் சொல்லிய அவர், சமூக வலைதளங்களில் மட்டுமின்றி பிற இடங்களிலும் பெண்களுக்கு எதிரான தவறான விமர்சனங்கள் எழும்போது புகார் அளித்தால் போலீசார் கடுமையாக நடவடிக்கை எடுப்பார்கள் என்றும், பெண்களின் பாதுகாப்பும் மாண்பும் உறுதி செய்ய காவல் துறையிடம் அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.





