புதுடில்லி சப்தர்ஜங் பகுதியில் உள்ள டில்லி ஜிம்கானா கிளப் நிலத்தை திரும்பப் பெறும் நடவடிக்கையை மத்திய அரசு தொடங்கியுள்ளது. ஜூன் 5க்குள் நிலத்தை ஒப்படைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
பிரிட்டிஷ் காலனித்துவ காலத்தில் உருவான, நூற்றாண்டை கடந்த பழமையான தனியார் கிளப்பாக டில்லி ஜிம்கானா கிளப் குறிப்பிடப்படுகிறது. தலைநகரின் மையப்பகுதியில் சுமார் 27 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த கிளப்பில் உயரதிகாரிகள், அரசியல்வாதிகள், செல்வந்தர்கள் உள்ளிட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர்.
கிளப்பில் நிதி முறைகேடுகள் நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, மத்திய அரசு நியமிக்கும் குழு நிர்வாகத்தை பொறுப்பேற்று நடத்த வேண்டும் என்று தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயம் முன்பு உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், அந்த நிலம் தேசிய பாதுகாப்பு மற்றும் உள்கட்டமைப்பு தொடர்பான நடவடிக்கைகளுக்கு தேவையானது என மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நிலம் மற்றும் மேம்பாட்டு அலுவலகம் மூலம் இதற்கான உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது.
ஜூன் 5 அன்று வளாக நிர்வாகப் பொறுப்பை அரசு ஏற்க இருப்பதாகவும், அதற்குள் சொத்தை ஒப்படைக்க வேண்டும் என்றும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது. குறிப்பிட்ட காலக்கெடுவில் ஒப்படைக்காவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுத்து உடைமையை கைப்பற்றப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.





