சென்னை: பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் கொடூர குற்றங்களில் ஈடுபடுவோருக்கு சட்டத்தின் கீழ் கடும் தண்டனை பெற்றுத்தர தமிழக அரசு உறுதியுடன் செயல்படும் என்று முதல்வர் விஜய் தெரிவித்தார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில், கோவையில் 10 வயது சிறுமிக்கு நடந்த கொடூர சம்பவம் மிகுந்த வேதனையும் அதிர்ச்சியும் அளிப்பதாக கூறினார். இத்தகைய மனிதநேயமற்ற, மன்னிக்க முடியாத குற்றங்கள் சமூகத்தில் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்றும் வலியுறுத்தினார்.
சிறுமியின் குடும்பத்தினர் தங்கள் குழந்தையைப் பிரிந்து வாடும் நிலையில் இருப்பதாக குறிப்பிட்டு, அவர்களுடன் தனது ஆழ்ந்த துயரத்தைப் பகிர்ந்துகொண்டார்.
இந்த வழக்கில் தொடர்புடையதாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், சம்பவம் குறித்து தீவிரமாகவும் விரைவாகவும் விசாரணை நடத்தி, குற்றப்பத்திரிகையை தாமதமின்றி தாக்கல் செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்க காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான இத்தகைய அராஜக செயல்களில் ஈடுபடுவோருக்கு கடுமையான சட்ட நடவடிக்கை உறுதி செய்ய உடனடி மற்றும் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்றும் முதல்வர் கூறினார்.





