மே 28 அன்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், டில்லியில் பசு, ஒட்டகம் உள்ளிட்ட சட்டப்படி தடை செய்யப்பட்ட விலங்குகளை பலியிடுவது சட்டவிரோதம் என்றும், இதை மீறுவோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் டில்லி அரசு எச்சரித்துள்ளது.
டில்லி மேம்பாட்டு துறை அமைச்சர் கபில் மிஸ்ரா வெளியிட்ட அறிக்கையில், அரசு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பண்டிகையை அமைதியான முறையில் கொண்டாடுமாறு கேட்டுக்கொண்டார். பொதுமக்கள் அதிகம் கூடும் தெருக்கள், சாலைகள், குடியிருப்புப் பகுதிகள் மற்றும் திறந்தவெளி இடங்களில் விலங்குகளை பலியிடுவதற்கு முழுத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
மேலும், டில்லி அரசால் அங்கீகரிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே குர்பானி வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. தடையை மீறி செயல்படும் சந்தைகள் மற்றும் அங்கு விலங்குகளை விற்பனை செய்வதும் சட்டப்படி குற்றமாக கருதப்படும் என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சட்டவிரோத விற்பனை மற்றும் பலியிடலைத் தடுக்க தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படும் என்றும், விதிமீறலில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். அதேபோல், விலங்குகளின் கழிவுகளை திறந்தவெளியில் அல்லது வடிகால்களில் கொட்டுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.





