வாஷிங்டன்: அமெரிக்காவின் எச்-1பி வேலை விசாவுக்கான விண்ணப்பங்கள் நடப்பாண்டில் 38.5% வரை குறைந்துள்ளதாக அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் அமைப்பு (USCIS) தெரிவித்துள்ளது.

அமெரிக்க அதிகாரிகள் கூறுகையில், கடந்தாண்டில் 3.44 லட்சமாக இருந்த விண்ணப்பங்கள் நடப்பாண்டில் 2.12 லட்சமாக குறைந்துள்ளன என்றனர். இதை அமெரிக்காவில் பணிபுரிய விருப்பம் குறைந்ததென பொருள் கொள்ள வேண்டாம் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

மாறாக, விசா தொடர்பான முறைகேடுகளைத் தடுக்க கொண்டு வரப்பட்ட முக்கிய விதிமாற்றங்களே இந்த சரிவுக்கு காரணம் என தெரிவித்தனர். புதிய அணுகுமுறையில் அதிக சம்பளம் வழங்கப்படும் தகுதியான பணிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

இதன் விளைவாக, குறைந்த சம்பளத்தில் பணியாளர்களை தேர்வு செய்யும் நிறுவனங்களின் விண்ணப்பங்கள் அதிகமாக நிராகரிக்கப்படுவதால், மொத்த விண்ணப்ப எண்ணிக்கையில் சரிவு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினர்.