மகனுக்கு சிறுநீரகம் தானம் அளிக்க தாய்மை நிரூபிக்க மரபணு பரிசோதனை செய்ய வேண்டிய அவசியமில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், மாற்று அறுவை சிகிச்சைக்கு ஒரு வாரத்திற்குள் ஒப்புதல் வழங்க தமிழக அரசின் உடல் உறுப்பு மாற்று அங்கீகார குழுவுக்கு உத்தரவிட்டுள்ளது.
மேற்கு வங்க மாநிலம் ஹவுராவைச் சேர்ந்த ரோஹித்குமார், சென்னை பெருங்குடியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தாயார் ரீட்டா சிறுநீரக தானம் வழங்க முன்வந்தார்.
ஆனால் தாய்–மகன் உறவு நிரூபிக்கப்படவில்லை எனக் கூறி, உடல் உறுப்பு மாற்று அங்கீகார குழு அறுவை சிகிச்சைக்கு ஒப்புதல் வழங்க மறுத்தது.
இதனை எதிர்த்து ரீட்டாவும் ரோஹித்குமாரும் உயர் நீதிமன்றத்தை அணுகினர். ஆதார் அட்டை, குடும்ப புகைப்படம், நிரந்தர கணக்கு எண் (PAN) அட்டை உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பித்தும் ஒப்புதல் மறுக்கப்பட்டதாகவும், நோய் நிலை மோசமடைந்துள்ளதால் அவசர அனுமதி தேவை என்றும் அவர்கள் வாதிட்டனர்.
நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் இந்த வாதத்தை ஏற்று, சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் ரோஹித் ரீட்டாவின் மகன் என்பதில் திருப்தி அடைவதாகக் கூறினார். எனவே மரபணு பரிசோதனை தேவையில்லை என்றும், ஒரு வாரத்தில் ஒப்புதல் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.





