தமிழக அரசின் நகர்ப்புற மேம்பாட்டு வாரியத் தலைவராக முன்னாள் அமைச்சர் கு.ப. கிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளதாக சென்னை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
திருச்சி மாவட்டம் குழுமணியைச் சேர்ந்த கு.ப. கிருஷ்ணன், அதிமுக சார்பில் 1991-ஆம் ஆண்டு ஸ்ரீரங்கம் தொகுதியில் வென்று வேளாண் அமைச்சராக பணியாற்றினார். பின்னர் “தமிழர் பூமி” என்ற கட்சியைத் தொடங்கி, அதன் பின் தேமுதிகவில் இணைந்தார்.
மீண்டும் அதிமுகவில் சேர்ந்த அவர், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஓ.பன்னீர்செல்வம் அணியில் இணைந்ததாக கூறப்படுகிறது. கடந்த ஜனவரியில் சென்னை மாமல்லபுரத்தில் தவெக தலைவர் விஜய் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்த அவர், அண்மையில் நடந்த சட்டசபைத் தேர்தலில் லால்குடி தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
இரு தொகுதிகளில் வென்ற விஜய், முதல்வராகும் முன்பு திருச்சி கிழக்கு தொகுதியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, அந்த இடத்தில் யாரை வேட்பாளராக நிறுத்துவது என்ற பேச்சுகள் எழுந்தன. அந்த சூழலில் கு.ப. கிருஷ்ணனுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்ற தகவல்கள் பரவிய நிலையில், தற்போது அவர் வாரியத் தலைவராக நியமிக்கப்பட்டதால் திருச்சி கிழக்கில் அவர் போட்டியிட மாட்டார் என்பது உறுதியாகியுள்ளது.





