மேகதாது விவகாரத்தில் முதல்வர் விஜயின் நிலைப்பாடு என்ன?
மேகதாதுவில் அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்க தமிழகத்திற்கு “உரிமை இல்லை” என கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் கூறியதைத் தொடர்ந்து, தமிழக முதல்வர் விஜய் எவ்வாறு பதிலளிப்பார் என்பதில் டெல்டா விவசாயிகள் கவனம் செலுத்தியுள்ளனர்.
காவிரி நதி தமிழகத்தின் ஜீவாதாரமாகவும், டெல்டா உள்ளிட்ட பல மாவட்டங்களின் விவசாயத்திற்கும், சுமார் 20 மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் இருப்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இதனால், காவிரியின் குறுக்கே அணை கட்டும் முயற்சிகள் குறித்து அவர்கள் கடும் கவலை வெளியிடுகின்றனர்.
கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டுவதற்கான முயற்சிகளை தொடர்ந்து முன்னெடுத்து வருவதாகவும், மத்திய அரசின் ஒப்புதலை பெறும் நோக்கில் உறுதியாக நகர்வதாகவும் கூறப்படுகிறது. நீர்ப்பாசனத் துறை அமைச்சரும் துணை முதல்வருமான சிவக்குமார், திருத்தப்பட்ட விரிவான திட்ட அறிக்கை தயாராகி இருப்பதாகவும், விரைவில் மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்படும் என்றும், ஒப்புதல் கிடைத்ததும் உடனடியாக பூமி பூஜை நடைபெறும் என்றும் தெரிவித்தார்.
இந்த கருத்துகள் டெல்டா உள்ளிட்ட பகுதிகளில் அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. காங்கிரஸ் தற்போது தமிழக வெற்றிக் கழகத்தின் பக்கம் சென்று அமைச்சர்கள் பெற்றுள்ள சூழலில், மேலும் முதல்வர் விஜய் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் நெருக்கம் காட்டுவதாக கூறப்படும் நிலையில், மேகதாது விவகாரத்தில் கர்நாடக அரசுடன் பேசி தீர்வு காண முயற்சி எடுக்கப்படுமா என விவசாயிகள் கேள்வி எழுப்புகின்றனர். அரசு ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் தமிழகத்தின் உரிமை விட்டுக்கொடுக்கப்படக் கூடாது என்பதே அவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.





