சென்னை: சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள ஷாஜஹான், தலைமைச் செயலகத்தில் துவா ஓதப்பட்ட பின் தனது அதிகாரப்பூர்வ பணிகளை தொடங்கினார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியைச் சேர்ந்த ஷாஜஹான், நேற்று காலை கவர்னர் மாளிகையில் பதவியேற்றார். அதன் பின்னர் அரசு காரில் தலைமைச் செயலகத்திற்கு வந்தார். அவருடன் குடும்பத்தினர் மற்றும் ராமநாதபுரம் எம்.பி. நவாஸ் கனி உள்ளிட்டோர் வந்ததாக தெரிவிக்கப்பட்டது.

அமைச்சர் தனது இருக்கையில் அமருவதற்கு முன் இஸ்லாமிய குருமார் துவா ஓதினர். அதன் பின் ஷாஜஹான் இருக்கையில் அமர்ந்து பணிகளை தொடங்கினார்.

இதேபோல், சமூக நீதித் துறை அமைச்சராக பதவியேற்ற வி.சி.க.வைச் சேர்ந்த வன்னி அரசு, தலைமைச் செயலகத்தில் தமக்கு ஒதுக்கப்பட்ட அறைக்கு வி.சி.க. தலைவர் திருமாவளவன் மற்றும் நிர்வாகிகளுடன் வந்தார். திருமாவளவன் பூங்கொத்து மற்றும் புத்தகம் வழங்கி வாழ்த்து தெரிவித்ததுடன், அமைச்சரை இருக்கையில் அமர வைத்தார்.