வரும் ஆண்டுகளில் பொருளாதார நெருக்கடியை மட்டுமல்ல; அரசியல் நெருக்கடியையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என பிரதமர் நரேந்திர மோடி மத்திய அமைச்சர்களுக்கு எச்சரிக்கை விடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஐந்து நாள் வெளிநாட்டு பயணத்தை முடித்து நாடு திரும்பிய பின்னர் டெல்லியில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் அவர் இதை கூறியதாக தெரிவிக்கப்படுகிறது.
சுமார் நான்கரை மணி நேரம் நீடித்த அந்த கூட்டத்தில், மேற்காசிய போரின் பின்னணியில் உருவான எரிபொருள் நெருக்கடியால் ஏற்பட்ட “அசாதாரண சூழல்” குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. கொரோனா காலத்தில் எடுத்த அணுகுமுறையைப் போலவே இந்த நெருக்கடியையும் வெற்றிகரமாக எதிர்கொள்ள அனைத்து துறைகளும் தயாராக இருக்க வேண்டும் என அவர் அறிவுறுத்தியதாக தகவல்.
மேலும், சூரியசக்தி மின் உற்பத்தியை அதிகரிப்பது எரிபொருள் நெருக்கடியை சமாளிக்க உதவுகிறது என்றும், உள்நாட்டிலேயே எரிவாயு மற்றும் கச்சா எண்ணெய் எடுப்பதற்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
தேர்தல் கால அட்டவணையையும் அவர் குறிப்பிடித்ததாக தகவல். 2029 லோக்சபா தேர்தல் மற்றும் 2028 இறுதியில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் சட்டசபை தேர்தல்கள் நடைபெற உள்ளதால், அரசியல் சூழல் தீவிரமாகலாம் என அவர் கூறியதாக தெரிவிக்கப்படுகிறது. சமூக ஊடகங்களில் பரவும் பிரசாரங்கள் மற்றும் அரசியல் முயற்சிகள் அதிகரிக்கக்கூடும் என்பதையும் சுட்டிக்காட்டி, இளைஞர்கள்—குறிப்பாக மாணவர்கள்—மத்தியில் ஈடுபாட்டை அதிகரிக்க அமைச்சர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்றும், வரவிருக்கும் சட்டசபை தேர்தல்களிலும் வெற்றி பெற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.





