பஞ்சாப் மாநிலம் பதான்கோட் அருகே ராணுவத்தின் நடமாட்டத்தை ரகசியமாக கண்காணித்து, அந்த காட்சிகளை பாகிஸ்தானுக்கு அனுப்பியதாக கூறப்படும் நபரை பஞ்சாப் போலீசார் கைது செய்துள்ளனர்.

போலீசார் தெரிவித்ததாவது, ஜம்மு–காஷ்மீர் பகுதிகளுடன் பதான்கோட்டை இணைக்கும் முக்கிய வழித்தடமாக உள்ள தேசிய நெடுஞ்சாலை 44-ன் சுஜான்பூர் பகுதியில், ஒரு பாலம் அருகே கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டிருந்தது. பதான்கோட் மாவட்டத்தில் முக்கிய ராணுவ மண்டலம் மற்றும் பல்வேறு ராணுவ கட்டமைப்புகள் உள்ளதால், இந்த வழித்தடம் ராணுவ போக்குவரத்துக்கு முக்கியமானதாக கருதப்படுகிறது.

அந்த கேமரா இணையதளத்துடன் இணைக்கப்பட்டு நேரடியாக ஒளிபரப்பாகி வந்ததாகவும், இதுவே சந்தேகத்தை அதிகரித்ததாகவும் போலீசார் கூறினர். விசாரணையில், பதான்கோட் மாவட்டம் சக் தாரிவால் கிராமத்தைச் சேர்ந்த பல்ஜித் சிங் கேமராவை பொருத்தி, அதன் மூலம் ராணுவம் மற்றும் துணை ராணுவத்தினரின் நடமாட்டக் காட்சிகளை பாகிஸ்தானில் உள்ளவர்களுக்கு அனுப்பியதாக உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

மேலும், இந்த விவகாரத்தில் ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாயில் உள்ள ஒருவருடன் தொடர்பு இருப்பது தெரிய வந்ததாக போலீசார் கூறினர். பல்ஜித் சிங்கின் வங்கி கணக்குகளை ஆய்வு செய்ததில், துபாய் நபரிடமிருந்து சமீபத்தில் ரூ.40,000 பெற்றிருப்பதும் கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட கேமரா தடயவியல் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தின் பின்னணியில், முக்கிய நெடுஞ்சாலைகளில் சோதனைகளை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.