மே 26ம் தேதி டில்லியில் நடைபெற உள்ள ‘குவாட்’ நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டில், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் தற்போதைய நிலவரம் மற்றும் மேற்காசிய போரால் உருவான தாக்கங்கள் உள்ளிட்ட சர்வதேச அரசியல் சூழல் குறித்து விவாதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நான்கு நாடுகள் இணைந்த கூட்டமைப்பே ‘குவாட்’. இந்தோ-பசிபிக் பகுதியில் அமைதி, பாதுகாப்பு, ஸ்திரத்தன்மையை வலுப்படுத்தும் நோக்கில் இது செயல்படுகிறது; சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தும் முயற்சியாகவும் இது பார்க்கப்படுகிறது.

தற்போது ‘குவாட்’ தலைமை பொறுப்பு இந்தியாவிடம் இருப்பதால், மத்திய அரசு டில்லியில் இந்த மாநாட்டை கூட்டியுள்ளது. வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ, ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் பென்னி வாங், ஜப்பான் வெளியுறவு அமைச்சர் தோஷிமிட்சு மொடேகி ஆகியோர் பங்கேற்கின்றனர்.

வெளியுறவு அமைச்சகத்தின் அறிக்கைப்படி, கடந்த ஆண்டு ஜூலை 1ம் தேதி வாஷிங்டனில் நடைபெற்ற விவாதங்களைத் தொடர்ந்து இந்தக் கூட்டம் நடைபெறுகிறது. நடப்பு திட்டங்களின் முன்னேற்றம், நான்கு நாடுகளிடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்துவது, சமீபத்திய பிராந்திய முன்னேற்றங்கள் ஆகியவை முன்னுரிமை பெறும்.

மாநாட்டுக்குப் பிறகு பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்கவும் அமைச்சர்கள் திட்டமிட்டுள்ளனர். மேலும், மாநாட்டின் இடையே ஆஸ்திரேலியா, ஜப்பான், அமெரிக்க வெளியுறவு அமைச்சர்கள் ஜெய்சங்கருடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.