குவாட் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தை முன்னிட்டு இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ புதுடில்லி வந்தடைந்தார்.
இதற்கு முன் அவர் கோல்கத்தா சென்றிருந்தார். அங்கு ‘மிஷனரிஸ் ஆப் சேரிட்டி’ தலைமையகத்தையும், அந்த அமைப்புடன் தொடர்புடைய குழந்தைகள் இல்லத்தையும் பார்வையிட்டார். கடந்த 14 ஆண்டுகளில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஒருவர் கோல்கத்தா சென்றது இதுவே முதல் முறை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டில்லிக்கு அவர் தனது மனைவி ஜினெட் ரூபியோ மற்றும் இந்தியாவிற்கான அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் ஆகியோருடன் வந்துள்ளார். இங்கு அவர் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார்.
மேலும், வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருடன் வர்த்தகம், பாதுகாப்பு, தொழில்நுட்பம், எரிசக்தி ஒத்துழைப்பு மற்றும் இந்தோ-பசிபிக் உத்தி உள்ளிட்ட விஷயங்களில் விரிவான பேச்சுவார்த்தைகள் நடைபெற உள்ளன.
அதேபோல், ஆக்ரா மற்றும் ஜெய்ப்பூர் நகரங்களுக்கும் அவர் பயணம் மேற்கொள்ள உள்ளார். மே 26-ம் தேதி நடைபெறவுள்ள குவாட் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்திற்கு முன்னதாக இந்தப் பயணம் அமைந்துள்ளது.





