புதுடில்லி: ஜேஇஇ மற்றும் நீட் தேர்வுகளை ஒருங்கிணைத்து, தேசிய அளவில் ஒரே நுழைவுத் தேர்வாக நடத்தும் சாத்தியக்கூறுகளை மத்திய அரசு ஆய்வு செய்து வருகிறது.

அண்மையில் நீட் வினாத்தாள் கசிவு நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், மத்திய அரசு தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்தப்படும் என அறிவித்தது. மேலும் அடுத்தாண்டு முதல் கணினி வழி (கம்ப்யூட்டர் அடிப்படையிலான) தேர்வாக நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக பார்லிமென்ட் குழு விசாரணையும் நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக, இளநிலை பொறியியல் மற்றும் மருத்துவ மாணவர் சேர்க்கைக்காக ஒருங்கிணைந்த தேசிய பொது நுழைவுத் தேர்வை நடத்துவது சாத்தியமா என்பதைக் குறித்து அரசு பரிசீலித்து வருவதாக தேசிய தேர்வு முகமை (என்டிஏ) அந்தக் குழுவிடம் தெரிவித்துள்ளது.

2024-ம் ஆண்டு நீட் தொடர்பான முறைகேடுகளுக்குப் பிறகு, இஸ்ரோ முன்னாள் தலைவர் கே. ராதாகிருஷ்ணன் தலைமையில் அமைக்கப்பட்ட உயர்மட்ட குழு அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த பரிசீலனை மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது. ஒப்புதல் கிடைத்தால், எதிர்காலத்தில் ஜேஇஇ மற்றும் நீட் இரண்டிற்கும் ஒரே நுழைவுத் தேர்வு அமலுக்கு வரும் வாய்ப்பு அதிகரிக்கும்.