புதுடில்லி: 8ம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் நீதித்துறை தொடர்பான சர்ச்சைக்குரிய பாடப்பிரிவை தயாரிக்க என்.சி.இ.ஆர்.டி.-க்கு உதவிய மூன்று கல்வியாளர்கள் தொடர்பான தனது முந்தைய உத்தரவில் உச்ச நீதிமன்றம் மாற்றம் செய்துள்ளது.
நீதித்துறையின் பல்வேறு மட்டங்களில் நிலவும் ஊழல் குறித்து பேசும் அந்தப் பாடப்பிரிவு கடந்த பிப்ரவரியில் நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்திய நிலையில், என்.சி.இ.ஆர்.டி. மன்னிப்பு கோரி அந்த உள்ளடக்கத்தை திரும்பப் பெற்றது.
இந்த வழக்கில் மார்ச் 11 அன்று வெளியான உத்தரவில், பேராசிரியர் மைக்கேல் டானினோ, சுபர்ணா திவாகம், அலோக் பிரசன்ன குமார் ஆகியோர் 8ம் வகுப்பு மாணவர்களிடம் இந்திய நீதித்துறையை எதிர்மறையாக காட்டும் நோக்கில் உண்மைகளை வேண்டுமென்றே திரித்து கூறியதாக பதிவுசெய்யப்பட்டதுடன், அவர்கள் நாடு முழுவதும் கல்விப் பணிகளில் ஈடுபட தடை விதிக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டது.
இதற்கு எதிராக, பாட உள்ளடக்கம் தயாரித்தல் என்பது தனிநபரின் தனிப்பட்ட அதிகாரத்தில் நடைபெறும் செயல் அல்ல; அது கூட்டு செயல்முறை எனக் கூறி மூவரும் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், மார்ச் 11 உத்தரவில் சிறிய மாற்றம் செய்துள்ளது.
திருத்தப்பட்ட உத்தரவின்படி, சம்பந்தப்பட்ட மூன்று பேராசிரியர்களை கல்விப் பணிகளில் பயன்படுத்திக் கொள்வதா வேண்டாமா என்பது மத்திய மற்றும் மாநில அரசுகள், அரசு நிதி உதவி பெறும் பல்கலைகழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் முடிவுக்கே விடப்பட்டுள்ளது.





