வி.சி.க தலைவர் தொல். திருமாவளவனை குறிவைத்து சமூக வலைத்தளங்களில் புதிய விமர்சன அலை எழுந்துள்ளது. குறுகிய இடைவெளிகளில் மாறுபடும் கருத்துகளை அவர் வெளிப்படுத்துவதாகக் கூறி பலரும் கடுமையாக பதிவிட்டு வருகின்றனர்.

இந்த விமர்சனங்களுக்கு காரணமாக, கடந்த ஆறு மாதங்களில் நடிகர்-அரசியல்வாதி விஜய் மற்றும் அவரது தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க) குறித்து திருமாவளவன் பேசிய உரைகள், பேட்டிகள் ஆகியவற்றின் துணுக்குகள் தற்போது வைரலாக பகிரப்படுகின்றன. அவற்றில் கருத்தின் திசை அடிக்கடி மாறுகிறது என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.

ஜனவரி, பிப்ரவரி மாதங்களில், விஜயின் அரசியல் அணுகுமுறையை அவர் கேள்விக்குள்ளாக்கியதாகவும், கருணாநிதி, ஜெயலலிதா போன்ற ஆளுமைகள் இல்லாத சூழலில் சினிமா புகழை மட்டும் முதலீடாக வைத்து அரசியலில் வெற்றி பெற முடியாது என்ற வகையில் மறைமுகமாக விமர்சித்ததாகவும் பதிவுகள் சுட்டிக்காட்டுகின்றன. மேலும், பா.ஜ.க.வை எதிர்த்து ஒரு அறிக்கையாவது வெளியிடவில்லை எனவும் அவர் கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது.

மார்ச், ஏப்ரல் காலகட்டத்தில், திமுக அரசின் நலத்திட்டங்களை முன்னிறுத்தி விஜயின் இலவச அறிவிப்புகளை விமர்சித்ததாகவும், த.வெ.க-வை அ.தி.மு.க-பா.ஜ.க கூட்டணியில் இணைக்க முயற்சிகள் நடந்தால் அது விஜயின் அரசியல் எதிர்காலத்தை பாதிக்கலாம் என எச்சரித்ததாகவும் பகிரப்படும் மேற்கோள்கள் தெரிவிக்கின்றன. தேர்தல் பிரசார கூட்டங்களில் திமுக ஆட்சித் தொடர்ச்சி வேண்டும் என வலியுறுத்தியதோடு, களம் இருமுனை போட்டியே என்ற நிலைப்பாட்டையும் அவர் எடுத்ததாக கூறப்படுகிறது.

இந்த கருத்துத் தொகுப்புகள் பரவியதைத் தொடர்ந்து, திருமாவளவன் “நிமிஷத்துக்கு நிமிஷம் மாறும் கருத்து” கொண்டவர் என விமர்சகர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதற்கு ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்கள் இடையே சமூக வலைத்தளங்களில் வாதப்பிரதிவாதம் தொடர்கிறது.