அமெரிக்க உளவுத்துறை இயக்குநராக இருந்த துளசி கபார்ட், தனது கணவரின் உடல்நிலை காரணமாக பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். பொதுச் சேவையிலிருந்து தற்காலிகமாக விலகி, குடும்பத்திற்கான பொறுப்பில் கவனம் செலுத்தப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சமூக வலைதளத்தில் பகிர்ந்த ராஜினாமா கடிதத்தில், தனது கணவர் ஆபிரகாம் எலும்புப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறினார். வரவிருக்கும் நாட்களில் அவர் எதிர்கொள்ள வேண்டிய சவால்களை கருத்தில் கொண்டு, அவருக்கு அருகில் இருந்து உதவ விரும்புவதாகவும், தாம் பதவியில் தொடர்ந்தால் அவர் உடல் ரீதியான பிரச்னைகளை தனியாக எதிர்கொள்ள வேண்டிய நிலை மனசாட்சிக்கு ஏற்றதல்ல என்றும் குறிப்பிட்டார்.
தன் மீது நம்பிக்கை வைத்ததற்காக அதிபர் டிரம்புக்கும் அவரது குழுவினருக்கும் நன்றி தெரிவித்தார். குடும்பத்திற்கு கடினமான இந்த நேரத்தில் காட்டிய அக்கறைக்கும் நன்றி கூறிய அவர், நாட்டுக்கு சேவை செய்யும் வாய்ப்பை அளித்த அமெரிக்க மக்களுக்கும் நன்றியுடன் இருப்பதாக தெரிவித்தார்.
ஈரான் போர் தொடர்பான கருத்து வேறுபாடுகள் பேசப்படும் சூழலில் இந்த ராஜினாமா கவனம் பெற்றுள்ளது. மேலும், ஹவாயைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான துளசி கபார்ட், டிரம்ப் இரண்டாவது முறையாக அதிபராக பொறுப்பேற்ற பின் கடந்த ஆண்டு பிப்ரவரியில் உளவுத்துறை இயக்குநராக நியமிக்கப்பட்டார்; அவர் தேசிய உளவுத்துறையின் எட்டாவது இயக்குநர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.





