புதுடில்லி: கூகுள், மைக்ரோசாப்ட், அமேசான், பேஸ்புக் போன்ற உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனங்கள் நவீன காலத்தில் “புதிய கிழக்கு இந்திய கம்பெனிகள்” போல மாறும் அபாயம் இருப்பதாக ஸோகோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு எச்சரித்துள்ளார்.

கிழக்கு இந்திய கம்பெனியின் அடித்தளம் மலிவான மூலப்பொருட்களை வெளியே அனுப்பி, மதிப்பு கூட்டப்பட்ட தயாரிப்புகளை மீண்டும் இறக்குமதி செய்வதில்தான் இருந்தது என அவர் நினைவூட்டினார். அந்த மாதிரி அமைப்பு இந்தியாவுக்கு ஏற்படுத்திய விளைவுகள் வரலாற்றில் தெளிவாக உள்ளன என்றும் கூறினார்.

மலிவான மூலப்பொருட்களை மற்றவர்களிடம் ஒப்படைத்து, மதிப்பு கூட்டும் செயல்முறைகள் அனைத்தும் வேறு இடத்தில் நடந்து, பின்னர் தயாரிப்புகளை நாம் இறக்குமதி செய்தால் அது காலனித்துவ பொருளாதாரத்தின் அடிப்படை என அவர் விளக்கினார். இதே வழிமுறையில்தான் கிழக்கு இந்திய கம்பெனி இந்தியாவை ஆதிக்கம் செய்ததாகவும் தெரிவித்தார்.

இதே போன்ற அபாயம் இன்றைய பன்னாட்டு நிறுவனங்களிடமும் இருக்கலாம்; அதைப் பற்றி விழிப்புடன் இருக்க வேண்டும்; இது கற்பனை அல்ல என்றும் அவர் கூறினார். மேலும், ஒரு இந்தியர் அந்த நிறுவனங்களில் சிஇஓ ஆக இருப்பதால் ஏமாறக்கூடாது; எந்த நாட்டின் சட்டங்கள், இறையாண்மை மற்றும் அதிகார வரம்பு நடைமுறையில் உள்ளன என்பதே முக்கியம் என ஸ்ரீதர் வேம்பு வலியுறுத்தினார்.