பெங்களூருவில் வயதான பெண் ஒருவரை சுமார் 5 மாதங்கள் ‘டிஜிட்டல் அரெஸ்ட்’ என்ற பெயரில் மிரட்டி ரூ.24 கோடி பறித்ததாக 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

போலீசார் கூறியதன்படி, லட்சுமி ராமமூர்த்தி என்பவர் சமீபத்தில் நிலம் ஒன்றை விற்றதால் பெரிய தொகை கிடைத்துள்ளது. இதை அறிந்ததாக கூறப்படும் மோசடியாளர்கள், விசாரணை அமைப்பு என தங்களை அறிமுகப்படுத்தி தொடர்பு கொண்டு, மிரட்டல் மூலம் அவரை மனஅழுத்தத்தில் வைத்துள்ளனர்.

ஜனவரி மாதம் முதல் இம்மாதம் வரை பல தவணைகளில் அவர்கள் கூறிய வங்கிக்கணக்குகளுக்கு லட்சுமி ரூ.24 கோடியை அனுப்பியதாக போலீசார் தெரிவித்தனர். பின்னர் மேலும் பணம் கேட்டு மிரட்டியதால், அவர் ஐசிஐசிஐ வங்கிக்கு சென்று சுமார் 1.3 கிலோ தங்கத்தை அடகு வைக்க முயன்றபோது விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது.

வங்கி மேலாளர் விசாரித்தபோது சந்தேகம் ஏற்பட்டதால், பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசுக்கு தகவல் அளிக்கப்பட்டது. தொடர்ந்து நடந்த விசாரணையில் ‘டிஜிட்டல் அரெஸ்ட்’ முறையில் பணம் இழந்தது உறுதியாகியதாக போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து கவுரவ் குமார், ஓம்பிரகாஷ் ராஜ்புத் உள்ளிட்ட 5 பேரை கைது செய்த போலீசார், அவர்களது கணக்குகளில் இருந்த ரூ.60 லட்சத்தை முடக்கியுள்ளனர். மேலும் பணம் பெற பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் 22 வங்கிக்கணக்குகளை கண்டறிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.