புதுடில்லி: லோக் சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வெளிநாட்டு சக்திகளுடன் இணைந்து மோடி அரசை கவிழ்க்கவும், நாட்டில் வன்முறையைத் தூண்டவும் சதி செய்கிறார் என்று பாஜ சனிக்கிழமை குற்றம்சாட்டியது.
கடந்த வாரம் காங்கிரஸ் சிறுபான்மைப் பிரிவின் ஆலோசனைக் கூட்டத்தில், “மோடி அரசு ஓராண்டுக்குள் கவிழும்” என்று ராகுல் கூறியதாக தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த விமர்சனம் எழுந்துள்ளது.
அந்த கருத்துக்கு பதிலளித்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், ராகுலின் பேச்சு காங்கிரஸ், எதிர்க்கட்சிகள் மற்றும் “டூல்கிட் கும்பல்” இணைந்து இந்தியாவைச் சீர்குலைக்கத் திட்டமிட்டுள்ள பெரிய சதியை வெளிப்படுத்துவதாக கூறினார்.
நேரடித் தேர்தலில் பாஜவைத் தோற்கடிக்கவோ அல்லது அரசை பதவியிலிருந்து நீக்கவோ முடியாது என்பதை உணர்ந்ததால், ராகுலும் அவரது கூட்டாளிகளும் நாடு முழுவதும் கலவரத்தைத் தூண்டும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள் என்றும், நாட்டில் நடக்கும் எந்த நேர்மறை விஷயத்தையும் அவர்கள் பொறுத்துக்கொள்ள முடியாது என்றும் கோயல் குற்றம்சாட்டினார்.





