கொல்கட்டா: மேற்கு வங்கத்தில் புதிதாக பொறுப்பேற்ற பா.ஜ. அரசு, திரிணமுல் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் கொல்கட்டா சால்ட் லேக் மைதானத்தின் வி.வி.ஐ.பி. நுழைவாயிலில் நிறுவப்பட்டிருந்த பிரமாண்ட கால்பந்து சிற்பத்தை அகற்றியுள்ளது.
2017ஆம் ஆண்டு 17 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் மாநிலத்தில் நடந்தபோது இந்த சிற்பம் அமைக்கப்பட்டது. இரண்டு பெரிய கால்கள் கால்பந்தை உதைப்பது போலவும், நடுவில் “பிஸ்வ பங்களா” மற்றும் “ஜோயி” என்ற வார்த்தை பொறிக்கப்பட்ட பந்தும் இடம்பெறும் வகையில் அது வடிவமைக்கப்பட்டிருந்தது. அப்போது இந்த சிற்பத்தை மம்தா பானர்ஜியே வடிவமைத்ததாக கூறப்பட்டது.
தலையில்லாமல் இடுப்புக்கு கீழே மட்டும் காட்டும் வடிவமைப்பு மற்றும் அதில் உள்ள குறியீடுகள் வெளியிடப்பட்ட காலத்திலேயே கால்பந்து ரசிகர்கள் மற்றும் பொதுமக்களிடையே விமர்சனங்களை ஏற்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், அந்த விசித்திர சிற்பம் நேற்று அகற்றப்பட்டதால் மாநில அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
விளையாட்டுத் துறை அமைச்சர் நிசித் பிரமாணிக், இந்த சிற்பம் பார்ப்பதற்கே அழகில்லாமல் விகாரமாக இருப்பதாகவும், நுழைவாயிலில் இதுபோன்ற அமைப்பு தேவையில்லை என்றும் கூறினார். மேலும் சால்ட் லேக் மைதானத்தை உலகத் தரத்துக்கு இணையாக மேம்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் பா.ஜ. அரசு அறிவித்துள்ளது.





