திருவண்ணாமலை கோவிலில் கூட்ட நெரிசல் மற்றும் தரிசன தாமதம் தொடர்பாக, பக்தர்கள் விரைவாக தரிசனம் செய்யும் வகையில் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என ஹிந்து அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் தெரிவித்தார்.

திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர்–அகிலாண்டேஸ்வரி கோவிலில் ஆய்வு மேற்கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கோவில்களில் பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் குறித்து துறை சார்பில் ஆய்வு செய்யப்பட்டதாக கூறினார்.

ஆய்வின்போது பிரசாத கடைகளில் விற்பனை செய்யப்பட்ட சில பொருட்களில் தயாரிப்பு தேதி மற்றும் காலாவதி தேதி குறிப்பிடப்படவில்லை என்பதை கவனித்ததாகவும், இதுபோன்ற பொருட்கள் விற்பனைக்கு வரக்கூடாது எனவும் தெரிவித்தார். இதற்காக தமிழகம் முழுவதும் கோவில்களில் உள்ள பிரசாத கடைகளில் விற்பனைப் பொருட்களை ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதாக கூறினார்.

மேலும், நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியதாகவும் தெரிவித்தார். திருவண்ணாமலை கோவிலில் தற்போது உடனடி முறையில் விரைவு தரிசனத்திற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளதாகவும், அங்கு ஆய்வு நடத்தி கூடுதல் ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் அமைச்சர் ரமேஷ் கூறினார்.