டில்லி ஐஐடி பட்டதாரியான குர்தேஜ் சிங் சந்து, முனைவர் பட்டப் படிப்புக்காக அமெரிக்கா சென்ற பின்னர், அமெரிக்காவில் அதிக காப்புரிமைகள் பெற்ற முன்னணி கண்டுபிடிப்பாளர்களில் ஒருவராக உயர்ந்துள்ளார். இதன் மூலம் தாமஸ் ஆல்வா எடிசனின் காப்புரிமை சாதனையையும் அவர் மிஞ்சியதாக செய்தி கூறுகிறது.

அறிக்கையின் படி, எடிசனின் 1,093 காப்புரிமைகளைத் தாண்டி, சந்து அமெரிக்காவில் மட்டும் 1,400-க்கும் அதிகமான காப்புரிமைகளையும், உலகளவில் 2,200-க்கும் மேற்பட்ட காப்புரிமைகளையும் பெற்றுள்ளார். இதனால் அமெரிக்க வரலாற்றில் அதிக காப்புரிமை பெற்றவர்களில் 7வது இடத்தில் அவர் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சந்து, பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் பிறந்து வளர்ந்தவர். குரு நானக் தேவ் பல்கலைக்கழகத்தில் கல்வியைத் தொடங்கி, பின்னர் டில்லி ஐஐடி-யில் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங்கில் எம்.டெக் முடித்தார். தொடர்ந்து அமெரிக்காவின் வட கரோலினா பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் பிஎச்.டி முடித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகளாவிய மைக்ரோ எலக்ட்ரானிக்ஸ் ஆராய்ச்சியில் முக்கிய பங்களிப்பு செய்தவராகவும், மைக்ரான் டெக்னாலஜியுடன் சுமார் 35 ஆண்டுகளாக பணியாற்றி வருபவராகவும் அவர் குறிப்பிடப்படுகிறார். ஸ்மார்ட்போன்கள், லேப்டாப்கள், கிளவுட் கம்ப்யூட்டிங், டேட்டா சென்டர்கள் போன்றவற்றில் பயன்படும் மேம்பட்ட மெமரி சிப்கள் சிறியதாகவும் வேகமாகவும் செயல்பட அவரது செமிகண்டக்டர் கண்டுபிடிப்புகள் அடிப்படையாக இருந்ததாகவும், தற்போது நிறுவனத்தில் முக்கிய பொறுப்பில் இருப்பதாகவும் செய்தி கூறுகிறது.

இந்த சாதனை சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ள நிலையில், அவரது பயணத்தை பகிர்ந்து பலரும் பாராட்டி பதிவிட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.