புதுடில்லியில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய பின், இந்தியா மற்றும் அமெரிக்காவுக்கு பயங்கரவாதம் ஒரு பொதுச் சவாலாகவே நீடிக்கிறது என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்தார்.
ஹைதராபாத் இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில், இரு நாடுகளுக்கிடையேயான உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. தற்போதைய புவிசார் அரசியல் பதட்டங்களுக்கிடையில், வளைகுடா மற்றும் மேற்கு ஆசியப் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களும் விவாதிக்கப்பட்டதாக ஜெய்சங்கர் கூறினார்.
பாதுகாப்பு, வர்த்தகம், எரிசக்தி மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது பற்றியும் இருதரப்பும் பேசினதாக அவர் தெரிவித்தார். இரு நாடுகளுக்கும் பொதுநலன்கள் இருப்பதுபோலவே, பொதுச் சவால்களும் உள்ளன; அதில் பயங்கரவாதம் முக்கியமானது என்றும், இதுகுறித்த இந்தியாவின் நிலைப்பாடு தெளிவானது என்றும் அவர் குறிப்பிட்டார்.
ரூபியோ, விவாதிக்க வேண்டிய விஷயங்களும் இணைந்து செயல்பட வேண்டிய பணிகளும் பல உள்ளன என்று கூறினார். உலகின் இரண்டு மிகப்பெரிய ஜனநாயக நாடுகளாக இந்தியா-அமெரிக்கா உறவு முக்கியம் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் அமெரிக்கா-ஈரான் பேச்சுவார்த்தைகளில் ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், ஹார்முஸ் ஜலசந்தி சுங்கக் கட்டணமின்றி கப்பல் போக்குவரத்திற்காகத் திறந்திருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.





