சுற்றுச்சூழல் தினமான ஜூன் 5 அன்று 100 சதவீதம் எத்தனாலில் இயங்கும் ‘ஃப்ளெக்ஸ்-ஃப்யூல்’ காரை மாருதி சுசுகி நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளதாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் மிகப்பெரிய சுற்றுச்சூழல் பிரச்னையாக மாறியுள்ளதாக கூறினார். மின்சார ஸ்கூட்டர்கள், கார்கள், பஸ்கள், லாரிகள் உள்ளிட்டவை அதிகரித்து வருவது மகிழ்ச்சியளிப்பதாகவும், மின்சார டிராக்டரும் வந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
தான் வந்த வாகனம் 100% பயோ-எத்தனாலில் இயங்கக்கூடியது என கூறிய கட்காரி, எத்தனால் லிட்டருக்கு சுமார் ரூ.65க்கு விற்பனை ஆகிறது என்றார். அந்த வாகனம் இயங்கும் போது சுமார் 60% மின்சாரமும் உற்பத்தியாகிறது என்றும், கடந்த 1.5 ஆண்டுகளாக அதை பயன்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.
பெட்ரோல், டீசலுடன் ஒப்பிடும்போது எரிபொருள் செலவு லிட்டருக்கு ரூ.25 அளவுக்கு வரும் என அவர் கூறினார். இது இறக்குமதிக்கு மாற்றான, குறைந்த மாசுபாடு கொண்ட உள்நாட்டு தயாரிப்பு என்றும், விரைவில் மேலும் ‘ஃப்ளெக்ஸ்-ஃப்யூல்’ இன்ஜின் வாகனங்கள் அறிமுகமாகும் என்றும் தெரிவித்தார். டொயோட்டா, டாடா, மஹிந்திரா, சுசுகி உள்ளிட்ட 12 நிறுவனங்கள் ஏற்கனவே இதுபோன்ற வாகனங்களை அறிமுகம் செய்துள்ளன என்றும் அவர் கூறினார்.
மேலும் பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு பயன்பாட்டை குறைக்க வேண்டும் என வலியுறுத்திய அவர், இந்த எரிபொருட்களில் சுமார் 87% இறக்குமதி செய்யப்படுவதால் மாசுபாடு அதிகரிப்பதோடு இறக்குமதி சுமையும் உயர்கிறது என்றார்.





