தி.மு.க. கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மாநில துணைச் செயலராக இருந்த மீனா, கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பதவிகளிலிருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார்.
லால்குடியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்.எல்.ஏ. லீமா ரோஸ் மார்ட்டினின் வீட்டிற்கு சென்று மீனா வாழ்த்து தெரிவித்தார். அந்தப் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டதையடுத்து, தி.மு.க. தரப்பில் கடுமையான விமர்சனங்கள் எழுந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து வெளியிட்ட வீடியோவில், தானும் லீமா ரோஸ் மார்ட்டினும் 20 ஆண்டுகளாக குடும்ப நண்பர்கள் என்றும், “ஒரு நிமிடத்தில் தூக்கி வீசும் நட்பு அல்ல” என்றும் மீனா தெரிவித்தார். தாம் கட்சி மாறவில்லை எனக் கூறிய அவர், சமூக வலைதளங்களில் பரவும் விமர்சனங்களால் மன உளைச்சலுக்கு ஆளானதாகவும், இதுபோன்ற தாக்குதல்களே கட்சியின் நிலையை மாற்றியுள்ளதாகவும் குற்றம்சாட்டினார்.
இந்தச் சூழலில் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்த மீனா, கோவை சிங்காநல்லூர் தொகுதியில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்து நேர்காணலில் பங்கேற்றதாகவும், பின்னர் அந்தத் தொகுதி காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டதால் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றும் குறிப்பிட்டார். மேலும் 2022 உள்ளாட்சி தேர்தலில் மேயர் பதவிக்கான வாய்ப்பை கேட்டபோதும், உட்கட்சி அரசியலால் அது மறுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.





