ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அருகே வெங்கடேசபுரத்தில் உள்ள ‘கற்பகம்’ ரேஷன் கடையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் காந்திராஜ் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அங்கு பொதுமக்களுக்கு வழங்கப்படும் அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் எடை மற்றும் தரத்தை அவர் நேரில் பரிசோதித்தார்.

ரேஷன் கார்டுதாரர்களுக்கு சரியான எடையில் பொருட்கள் வழங்கப்பட வேண்டும்; இதில் எந்த தவறும் இருக்கக் கூடாது என அவர் ஊழியர்களிடம் வலியுறுத்தினார். வழங்கப்படும் பொருட்கள் தரமானதாகவும் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

தரமற்ற பொருட்கள் கடைக்கு வந்தால் அவற்றை மக்களுக்கு வழங்காமல் திருப்பி அனுப்ப வேண்டும் என அமைச்சர் கூறினார். மேலும், ஏதேனும் பிரச்னைகள் இருந்தால் உடனடியாக தனது கவனத்திற்கு கொண்டு வரவும், கடைக்கு வரும் பொதுமக்களிடம் அன்புடன் மற்றும் மரியாதையுடன் நடந்து கொள்ளவும் அறிவுறுத்தினார்.