சென்னை: மதுபான ஆலைகள் விதிமுறைகளை மீறியதாக கண்டறியப்பட்டால், அதற்கு உடந்தையாக செயல்பட்ட அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் விக்னேஷ் எச்சரித்தார்.

தமிழக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையின் செயல்பாடுகள் குறித்து சென்னையில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் அவர் இந்த அறிவுறுத்தலை வழங்கினார். கூட்டத்தில் துறை ஆணையர் கார்த்திகா உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

மனமகிழ் மன்றங்கள் முறையாக இயங்குகிறதா என்பதை மாவட்ட அளவிலான அதிகாரிகள் தணிக்கை செய்து உறுதிப்படுத்த வேண்டும் என அமைச்சர் தெரிவித்தார்.

மேலும், கள்ளச்சாராயம் காய்ச்சுதல் மற்றும் விற்பனை போன்ற நடவடிக்கைகள் முற்றிலும் இல்லாத வகையில் தொடர்ந்து தீவிர கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறினார். மதுபான ஆலைகள் விதிமுறைகளுக்கு உட்பட்டு இயங்குவதை கலால் மேற்பார்வை அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும்; விதிமீறல் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மட்டுமல்ல, உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் வலியுறுத்தினார்.