நாகப்பட்டினத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்குள் புதிய சலசலப்பு ஏற்பட்டுள்ளது. மனிதநேய மக்கள் கட்சி (ம.நே.ம.) தலைவர் மற்றும் நாகை எம்.எல்.ஏ. ஜவாஹிருல்லாவை குறிவைத்து, மாவட்ட தி.மு.க. வினர் பல பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர்.

நாகை சட்டசபைத் தொகுதியில் ஜவாஹிருல்லா தி.மு.க. கூட்டணி சார்பில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். தற்போது ம.நே.ம. தனிச்சின்னத்தில் தேர்தலில் நிற்கும் முடிவை எடுத்துள்ள நிலையில், அதனை முன்னிறுத்தியே இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

சென்னையில் மே 20 மற்றும் 21 தேதிகளில் ஜவாஹிருல்லா தலைமையில் நடந்த கட்சியின் தலைமை நிர்வாகிகள் மற்றும் பிரதிநிதிகள் ஆலோசனைக் கூட்டத்தில், வரவுள்ள லோக்சபா, சட்டசபை மற்றும் உள்ளாட்சி தேர்தல்களில் சொந்த சின்னத்தில் போட்டியிடுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கிடையில், தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் வெற்றி பெற்ற காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், வி.சி.க., இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் தமிழக வெற்றிக் கழகத்துக்கு ஆதரவு அளித்தது தி.மு.க. வினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. நாகையில் ஒட்டப்பட்ட போஸ்டர்களில், உதயசூரியன் சின்னத்தில் வென்ற எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து, அதே தொகுதியில் தனிச்சின்னத்தில் மீண்டும் போட்டியிடுமாறு ஜவாஹிருல்லாவிடம் கோரப்பட்டுள்ளது.