சென்னை: சமீப நாட்களில் சென்னை மண்டலத்தின் சில பகுதிகளில் ஏற்பட்ட இரவு நேர மின் தடைகள், மின் கேபிள் மற்றும் டிரான்ஸ்பார்மர் போன்ற விநியோக சாதனங்களில் ஏற்பட்ட பழுதுகளால் தான் என தமிழக மின் வாரியம் விளக்கம் அளித்துள்ளது. குறிப்பாக உச்ச பயன்பாட்டு நேரமான இரவில் அதிக மின் சுமை ஏற்படுவதால் பழுதுகள் அதிகரிக்கின்றன என்றும் தெரிவித்தது.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் பல இடங்களில் கடந்த சில தினங்களாக மின் சாதன பழுதால் மின் தடை ஏற்பட்டதாகவும், இதனால் மக்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. சில பகுதிகளில் மின் விநியோக நிலையங்கள் மற்றும் தொடர்புடைய சாதனங்களில் ஏற்பட்ட கோளாறுகளே தடைக்கு காரணம் என மின் வாரியம் தெரிவித்தது.

மாநிலத்தின் தினசரி மின் தேவை சமீப காலமாக 20,000 மெகாவாட்டிற்கு கீழே இருப்பதால், மின் தேவையை சிரமமின்றி பூர்த்தி செய்ய முடிகிறது என்றும், மாநில மின் பகிர்ந்தளிப்பு மையம் மற்றும் கட்டுப்பாட்டு மையங்கள் விநியோகத்தை கண்காணித்து உறுதி செய்கின்றன என்றும் கூறப்பட்டுள்ளது.

சென்னை மண்டலத்தில் 38.79 லட்சம் நுகர்வோருக்கு 253 துணை மின் நிலையங்கள், 40,798 டிரான்ஸ்பார்மர்கள், 16,582 கி.மீ. கேபிள்கள் மற்றும் 18,092 கி.மீ. மேல்நிலை கம்பிகள் வழியாக மின் விநியோகம் நடைபெறுகிறது என மின் வாரியம் தெரிவித்தது.

பழுதுகளை உடனடியாக சரிசெய்ய அனைத்து மின் விநியோக வட்டாரங்களிலும் நடமாடும் பராமரிப்பு குழுக்கள் மற்றும் தொழில்நுட்ப பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், 24 மணி நேர கண்காணிப்பு மற்றும் சீரமைப்புக்காக கூடுதலாக தற்காலிக பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. நுகர்வோர் சேவை மையங்கள், கள அலுவலர்கள் மற்றும் இணையதளங்கள் வழியாக பெறப்படும் புகார்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.