விநியோக பாதிப்பு அதிகரிப்பு

ஈரான்–அமெரிக்கா–இஸ்ரேல் போர் காரணமாக உலகளவில் பெட்ரோலியப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஹார்முஸ் ஜலசந்தி வழியாக இந்தியாவுக்கு வரும் கச்சா எண்ணெய் மற்றும் சமையல் எரிவாயு கப்பல்கள் வருவதில் தடங்கல் ஏற்பட்டதால் நெருக்கடி தீவிரமடைந்தது.

உற்பத்தியை உயர்த்த பிரதமர் வேண்டுகோள்

நாட்டின் தேவையை சமாளிக்க பொதுத் துறை மற்றும் தனியார் எண்ணெய் நிறுவனங்கள் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டார். இதைத் தொடர்ந்து பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் உற்பத்தியை உயர்த்தியதாக கூறப்படுகிறது.

ஏற்றுமதி தொடர்ந்ததால் அமைச்சர் கோபம்

ஆனால் ரிலையன்ஸ் உள்ளிட்ட சில தனியார் நிறுவனங்கள் நாட்டின் சூழலை கருத்தில் கொள்ளாமல் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியை தொடர்ந்ததாக தகவல். இதனால் பொதுத் துறை நிறுவனங்களுக்கு கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டதாகவும், இதுவே மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரிக்கு கோபத்தை ஏற்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

எரிவாயு தேவை உயர்வு; கட்டுப்பாடுகள்

நாட்டின் சமையல் எரிவாயு தேவை நாளொன்றுக்கு 50 லட்சம் சிலிண்டர்கள் என்ற நிலையில், போர் காரணமாக ஏற்பட்ட பீதியால் அது 75 லட்சமாக உயர்ந்ததாக அமைச்சர் பூரி தெரிவித்தார். இதை சமாளிப்பது கடினமாக இருந்ததால் பல கட்டுப்பாடுகளை கொண்டு வந்ததாகவும் கூறினார். தற்போது தனியார் நிறுவனங்கள் ஏற்றுமதிக்கு அதிக முக்கியத்துவம் தராமல், நாட்டின் தேவைக்கேற்ப செயல்படத் தொடங்கியுள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.