திருச்சி: தமிழக வெற்றிக் கழக (த.வெ.க.) அரசின் அமைச்சரவையில் ஜாதி பார்த்து துறைகள் ஒதுக்கப்பட்டதாக எழுந்த விமர்சனங்களை, ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் மறுத்தார்.
ஸ்ரீரங்கம் தொகுதியில் வெற்றி பெற்ற ரமேஷுக்கு முதல்வர் விஜய் ஹிந்து சமய அறநிலையத்துறை பொறுப்பை வழங்கிய நிலையில், அவர் பிராமணர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் அந்தத் துறை ஒதுக்கப்பட்டதாக சிலர் விமர்சித்தனர். இதற்கு பதிலளித்த அமைச்சர், த.வெ.க.யின் முதல் கொள்கை மதச்சார்பின்மை என்றும், யாருக்கும் ஜாதி அடிப்படையில் பதவி வழங்கப்படவில்லை என்றும் கூறினார்.
திருச்சியில் அளித்த பேட்டியில், ஜாதிக்கு எதிராக போராடிய ஈ.வெ. ராமசாமியை தன் கொள்கைத் தலைவராக ஏற்றதாகவும், ஜாதி, மதம், இனம், மொழி, பணம், பாலினம் உள்ளிட்ட எந்தப் பாகுபாடும் இல்லை என உறுதி ஏற்ற பிறகே கட்சியில் சேர்ந்ததாகவும் தெரிவித்தார். சேவை செய்யும் மனநிலையை அடிப்படையாகக் கொண்டு தான் வாய்ப்புகள் வழங்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
துறை சார்ந்த நடவடிக்கைகள் குறித்து, கோவில்களில் கூட்ட நெரிசல் மற்றும் நீண்ட நேரக் காத்திருப்பை குறைக்க உரிய நடவடிக்கைகள் எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். மேலும், கோவில் சொத்துகள் மற்றும் நில ஆக்கிரமிப்புகளை ஒவ்வொன்றாக ஆய்வு செய்து மீட்கப்படும் என்றும், இதைத் தானே நேரடியாக கண்காணிப்பதாகவும் கூறினார்.
கோவில்களில் இதுவரை நடந்திருக்கக்கூடிய முறைகேடுகள் அனைத்தும் சரி செய்யப்படும் என்றும், ஸ்ரீரங்கம் மற்றும் திருவானைக்காவலில் நிலவும் அடிமனை பிரச்னை குறித்து ஆய்வு செய்து தீர்வு காண நேரம் வழங்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.





