புதுடில்லி: அமெரிக்காவின் புதிய குடியேற்ற கொள்கை சட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க உருவாக்கப்பட்டதே தவிர, இந்தியர்களை குறிவைத்து அல்ல என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்தார்.
‘குவாட்’ வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டுக்கு முன்னதாக டில்லி வந்துள்ள ரூபியோ, சனிக்கிழமை இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கரை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில் இந்தியர்களுக்கான குடியேற்ற நடைமுறைகள் மற்றும் எச்-1பி விசா தொடர்பான சிக்கல்கள் குறித்து ஜெய்சங்கர் கவலை தெரிவித்தார்.
எச்-1பி விசா விண்ணப்பக் கட்டணம் அதிகரிக்கப்பட்டது இந்திய தகவல் தொழில்நுட்பத் துறையினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும், விசா நடைமுறைகளை எளிதாக்கி தாமதங்களை குறைக்க வேண்டிய அவசியத்தையும் ஜெய்சங்கர் வலியுறுத்தினார். பின்னர் இருவரும் இணைந்து செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது ரூபியோ, அமெரிக்க பொருளாதார வளர்ச்சிக்கு இந்தியர்கள் அளிக்கும் பங்களிப்பை புறக்கணிக்க முடியாது என்றும், அமெரிக்காவில் இந்தியர்கள் ₹1.70 லட்சம் கோடிக்கும் மேல் முதலீடு செய்துள்ளதாகவும் கூறினார். அதே நேரத்தில் அமெரிக்காவில் 2 கோடிக்கும் மேற்பட்டோர் சட்டவிரோதமாக குடியேறி இருப்பதால், அதைத் தடுக்கவே புதிய கொள்கை வகுக்கப்பட்டதாகவும், சட்டப்படி வர விரும்புபவர்களை தடுக்கவில்லை என்றும் தெரிவித்தார்.
ஜெய்சங்கர், சட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க அமெரிக்காவுடன் இந்தியா ஒத்துழைக்கும் என்றும், ஆனால் புதிய கொள்கையால் தகுதியான இந்தியர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதே இந்தியாவின் எதிர்பார்ப்பு என்றும் கூறினார். விசா வழங்கலில் ஏற்படும் சிக்கல்கள் மற்றும் தாமதம் குறித்து ரூபியோவிடம் எடுத்துரைத்ததாகவும் அவர் தெரிவித்தார்.





