மதுரை: முதல்வர் விஜய் அறிவுறுத்தலின்படி, தமிழக டி.ஜி.பி. சந்தீப்ராய் ரத்தோர் மாநிலம் முழுவதும் உள்ள மூத்த போலீஸ் அதிகாரிகளுடன் தினசரி ஆய்வுக் கூட்டங்களை தொடங்கியுள்ளார்.

கடந்த நான்கு நாட்களாக, சட்டம்-ஒழுங்கு ஏ.டி.ஜி.பி. மகேஸ்வர் தயாளுடன் இணைந்து, 38 மாவட்ட எஸ்.பி.,க்கள், 9 போலீஸ் கமிஷனர்கள் மற்றும் 4 மண்டல ஐ.ஜி.,க்களுடன் இரண்டு மணி நேரம் வீடியோ மாநாட்டில் ஆலோசனை நடத்தி அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகிறது.

சட்டம்-ஒழுங்கு, பெண்கள் பாதுகாப்பு, போதைப்பொருள் தடுப்பு ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என முதல்வர் தெரிவித்திருந்த நிலையில், சில பகுதிகளில் சட்டம்-ஒழுங்கு தொடர்பான சம்பவங்கள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும் போலீசார் மெத்தனமாக செயல்படுவதாக புகார்கள் எழுந்ததைத் தொடர்ந்து, மாவட்ட அளவிலான தலைமையுடன் தினமும் ஆலோசித்து தேவையான வழிகாட்டுதல்களை வழங்க டி.ஜி.பி.-க்கு முதல்வர் உத்தரவிட்டதாக தகவல் தெரிவிக்கிறது.

போலீசார் எடுத்த நடவடிக்கைகள், பிரச்னைக்குரிய வழக்குகள் மற்றும் சம்பவங்கள் தொடர்பான விவரங்களை பொதுமக்களுக்கு மறைவின்றி தெரிவிக்கவும் போலீஸ் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.