உத்தர பிரதேசத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடியை அவதூறாக பேசியதாக, மாநில காங்கிரஸ் தலைவர் அஜய் ராய் மீது போலீசார் எப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளனர்.
மகோபா மாவட்டம் சமத் நகரில் மே 22 அன்று காங்கிரஸ் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் கூறப்பட்டதாக சொல்லப்படும் கருத்துகள் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து கோட்வாலி காவல் நிலையத்தில் பா.ஜ.க. தொண்டர் ஒருவர் அளித்த புகாரில், அஜய் ராய் பிரதமரை இழிவாக பேசியதாகவும், சமூகத்தில் பதற்றத்தை உருவாக்க முயன்றதாகவும் கூறி நடவடிக்கை கோரினார்.
புகாரின் அடிப்படையில், கோட்வாலி போலீசார் பல்வேறு பிரிவுகளில் அஜய் ராய் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
இதற்கு பதிலளித்த அஜய் ராய், சமூக வலைதளங்களில் பரவும் வீடியோ “முழுக்க போலி” என்றும், பா.ஜ.க. செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்பம் மூலம் உருவாக்கியதாகவும் குற்றம்சாட்டினார். இதுதொடர்பாக தானும் போலீசில் புகார் அளிப்பதாகவும், சட்டப்படி எதிர்கொள்வதாகவும் தெரிவித்தார்.





