வாஷிங்டன்: தற்காலிக விசாவில் அமெரிக்காவில் இருப்பவர்கள், கிரீன் கார்டு (நிரந்தர குடியுரிமை) பெற சொந்த நாட்டுக்கு திரும்பி அங்குள்ள அமெரிக்கத் தூதரகம் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்ற கடுமையான விதியில் தற்போது சில விலக்குகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
கிரீன் கார்டு என்பது அமெரிக்காவின் நிரந்தர குடியுரிமை ஆவணம். இதைப் பெற்றவர்கள் அமெரிக்காவின் எந்த மாநிலத்திலும் நிரந்தரமாக வாழவும், வேலை செய்யவும் உரிமை பெறுவர். வேலைவாய்ப்பு, குடும்ப உறவுகள், முதலீடு போன்ற வழிகளில் இதை பெற முடியும்.
முன்னதாக எச்1பி, எல்1 உள்ளிட்ட விசாவில் பணியாற்றுவோர் அமெரிக்காவிலேயே தங்கி கிரீன் கார்டுக்கு விண்ணப்பிக்க முடிந்தது. ஆனால் அதிபர் டொனால்டு டிரம்ப் கொண்டு வந்த புதிய விதியின்படி, விண்ணப்பிக்க அமெரிக்காவை விட்டு வெளியேறி சொந்த நாட்டிலிருந்து விண்ணப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டது.
இந்த மாற்றத்துக்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், அமெரிக்க சுங்க மற்றும் குடியேற்றத் துறை புதிய விதியில் விலக்குகளை வழங்கியுள்ளது. நாட்டுக்கு பொருளாதார நன்மை மற்றும் தேச நலன் ஆகிய அடிப்படைகளில் வருவோருக்கு, அமெரிக்காவிலேயே தங்கி விண்ணப்பிக்கும் வாய்ப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தளர்வு தொழில்நுட்பம், ஆராய்ச்சி, மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் பணியாற்றும் இந்தியர்களுக்கு பொருந்தும் என்பதால், பலருக்கும் பெரும் நிம்மதி ஏற்பட்டுள்ளது.





