பால்டா மறு தேர்தலில் பா.ஜ.க-க்கு பெரிய வெற்றி

மேற்கு வங்கத்தில் பால்டா சட்டசபை தொகுதிக்கு நடந்த மறு தேர்தலில் பா.ஜ.க வேட்பாளர் தேபாங்ஷு பாண்டா, ஒரு லட்சத்துக்கும் அதிகமான ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

மாநிலத்தின் 294 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 23 மற்றும் 29 ஆகிய நாட்களில் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தின் பால்டா தொகுதியில் முறைகேடு புகார் எழுந்ததைத் தொடர்ந்து, மே 21 அன்று மறு வாக்குப்பதிவு நடத்தப்படும் என்றும், மே 24 அன்று ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் என்றும் தேர்தல் கமிஷன் அறிவித்தது.

மற்ற தொகுதிகளின் ஓட்டுகள் முன்பே எண்ணப்பட்ட நிலையில், பால்டா தொகுதியின் ஓட்டுகள் நேற்று எண்ணப்பட்டன. தொடக்கம் முதலே தேபாங்ஷு பாண்டா முன்னிலை வகித்தார். இறுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சம்புநாத் குர்மியை 1.09 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் அவர் தோற்கடித்தார்.

காங்கிரஸ் வேட்பாளர் அப்துல் ரசாக் மொல்லா மூன்றாம் இடத்தைப் பிடித்தார். கடைசி நேரத்தில் போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்த திரிணமுல் காங்கிரஸ் வேட்பாளர் ஜஹாங்கீர் கான் நான்காம் இடத்தில் முடிந்தார்.

இந்த வெற்றியால் மேற்கு வங்க சட்டசபையில் பா.ஜ.க-ன் பலம் 208 ஆக உயர்ந்துள்ளது.