புதுடில்லி: “கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி)” என்ற பெயரில் உருவான ஆன்லைன் பக்கத்தைச் சுற்றிய சர்ச்சையில், வழக்கறிஞர்கள் உணர்ச்சிவசப்பட்டு எதிர்மறையாகப் பதிலளிக்க வேண்டாம் என இந்திய தலைமை நீதிபதி சூர்யகாந்த் அறிவுறுத்தினார்.
சில நாட்களுக்கு முன் ஒரு வழக்கின் விசாரணையில் தலைமை நீதிபதி வாய்மொழியாக கூறிய கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தின. பின்னர், தன் கருத்து தவறாக திரித்து வெளியிடப்பட்டதாகவும், போலி மற்றும் பொய்யான பட்டம் பெற்றவர்களைப் பற்றியே குறிப்பிட்டதாகவும், இளைஞர்களை விமர்சிக்கவில்லை என்றும் அவர் விளக்கம் அளித்தார்.
இதனைத் தொடர்ந்து “சிஜேபி” என்ற பெயரில் ஆன்லைனில் ஒரு பக்கம் தொடங்கப்பட்டதாகவும், அதைத் தடை செய்ய மத்திய அரசு கோரியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், நீதிமன்ற வாய்மொழிக் கருத்துகளை வர்த்தக ரீதியில் பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, “சிஜேபி” நடவடிக்கைகள் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரி உச்சநீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பக்ஷி மற்றும் வி.எம். பஞ்சோலி ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. வாதத்தின் போது வழக்கறிஞர் என்.கே. கோஸ்வாமி, ஆன்லைன் செயல்பாடுகள் நீதித்துறையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதாக கூற, இதை உணர்ச்சிப்பூர்வமாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என தலைமை நீதிபதி தெரிவித்தார்.





