சமீபத்தில் நடந்த தமிழக சட்டசபைத் தேர்தலில் 28 தொகுதிகளில் போட்டியிட்டு ஐந்து இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றதன் பின்னணியை ஆய்வு செய்ய, காங்கிரஸ் டில்லி மேலிடம் ஐந்து பேர் கொண்ட உண்மை கண்டறியும் குழுவை அமைத்துள்ளது.

இதன் ஒரு பகுதியாக, தோல்வியடைந்த 23 தொகுதிகளின் காங்கிரஸ் வேட்பாளர்கள் சென்னையில் உள்ள கட்சி தலைமையகம் சத்தியமூர்த்தி பவனுக்கு அழைக்கப்பட்டனர். வேட்பாளர்கள் மற்றும் தொகுதி பொறுப்பாளர்களிடம், மேலிட பொறுப்பாளர்கள் கிரிஷ் ஷோடங்கர், நிவேதித் ஆல்வா உள்ளிட்டோர் மற்றும் மாநில நிர்வாகிகள் விசாரணை நடத்தினர்.

அந்த சந்திப்புகளில் தோல்விக்கான பொறுப்பை வேட்பாளர்களும் மாவட்டத் தலைவர்களும் ஒருவர்மீது ஒருவர் சுமத்தியதாக கூறப்படுகிறது. மேலும், தேர்தல் செலவுக்காக மேலிடம் வழங்கிய பணம் வேட்பாளர்களால் செலவிடப்படவில்லை என்பதும் தெரிய வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையடுத்து, தோல்வி காரணங்களும் பண முறைகேடு குற்றச்சாட்டுகளும் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட குழுவில் முன்னாள் எம்.பி. ஜெயகுமார், தமிழக காங்கிரஸ் துணைத் தலைவர்கள் இதயதுல்லா, சொர்ணா சேதுராமன், முன்னாள் அகில இந்திய காங்கிரஸ் செயலர் மெய்யப்பன், கமலாட்சி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்தக் குழு 60 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க உள்ளது.

விசாரணை விரைவில் தொடங்க உள்ளதால் தோல்வியடைந்த வேட்பாளர்கள் கலக்கத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. முறைகேடு நிரூபிக்கப்பட்டால், மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாது; கட்சிப் பதவியும் கிடையாது என டில்லி வட்டாரங்கள் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.