இந்திய விமானப்படையை வலுப்படுத்தவும், போர் விமானப் படைப்பிரிவுகளில் உள்ள பற்றாக்குறையைச் சரிசெய்யவும், பிரான்சிடமிருந்து மேலும் 114 ரபேல் போர் விமானங்களை வாங்க இந்தியா நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.
இந்த வாங்குதலுக்கான கோரிக்கை கடிதம் இறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அடுத்த சில வாரங்களில் அந்த கடிதம் பிரான்சுக்கு அனுப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒப்பந்தத்தில் இந்த ஆண்டு இறுதிக்குள் கையெழுத்திட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் முக்கிய அம்சமாக உள்நாட்டு தயாரிப்பு இடம்பெறுகிறது. சுமார் 90 விமானங்கள் இந்தியாவிலேயே தயாரிக்கப்படவுள்ளதாகவும், மீதமுள்ளவை பறக்கும் நிலையில் (fly-away) வந்து சேரும் என்றும் கூறப்படுகிறது.
இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ள நிலையில், இந்திய விமானப்படைத் தளபதி ஏ.பி. சிங் அடுத்த மாத தொடக்கத்தில் பிரான்ஸ் செல்லவுள்ளார். பிரதமர் நரேந்திர மோடியும் ஜூன் மாத இறுதியில் பிரான்ஸ் செல்லலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய விமானப்படை ஏற்கனவே 36 ரபேல் விமானங்களை இயக்கி வருகிறது.
இதற்கிடையில், விமானம் தாங்கி கப்பல் நடவடிக்கைகளுக்காக அடுத்த சில ஆண்டுகளில் 26 ரபேல் விமானங்களை இணைத்துக்கொள்ள இந்திய கடற்படையும் தயாராகி வருகிறது.





