இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், இந்தியர்களுக்கான அமெரிக்க விசா நடைமுறைகளில் உள்ள கெடுபிடிகள் மற்றும் தாமதங்களை குறைத்து எளிமைப்படுத்த வேண்டும் என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோவிடம் டில்லியில் வலியுறுத்தினார்.

டில்லியில் நாளை நடைபெற உள்ள ‘குவாட்’ (இந்தியா–அமெரிக்கா–ஜப்பான்–ஆஸ்திரேலியா) வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டை முன்னிட்டு, ஹைதராபாத் இல்லத்தில் இருவரும் உயர்மட்ட ஆலோசனை நடத்தினர். இருதரப்பு உறவு, வர்த்தகம் மற்றும் விசா நடைமுறைகள் குறித்து விரிவாக பேசப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இந்தியா–அமெரிக்கா நட்புறவின் மையமாக மக்கள்-மக்கள் தொடர்புகள் இருப்பதாக ஜெய்சங்கர் கூறினார். இந்தியர்கள் அமெரிக்காவுக்கு எளிதாக சென்று வரும்படி விசா நடைமுறைகளை எளிமைப்படுத்த வேண்டும் என்றும், விசா வழங்குவதில் ஏற்படும் சிக்கல்கள் மற்றும் தாமதம் குறித்த கவலைகளை ரூபியோவிடம் எடுத்துரைத்ததாகவும் தெரிவித்தார். இதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக ரூபியோ உறுதி அளித்ததாக அவர் கூறினார்.

மேலும், அமெரிக்கா ‘அமெரிக்காவுக்கே முன்னுரிமை’ என்ற அணுகுமுறையில் வெளியுறவு கொள்கையை பின்பற்றினால், இந்தியாவும் ‘இந்தியாவுக்கே முன்னுரிமை’ என்ற அடிப்படையில் செயல்படும் என்று ஜெய்சங்கர் எச்சரித்தார். சட்டவிரோத குடியேற்றத்தை ஒடுக்க இந்தியா முழு ஒத்துழைப்பு அளிக்கும்; ஆனால் புதிய குடியேற்ற கொள்கைகள் மற்றும் விசா கெடுபிடிகள் தகுதி வாய்ந்த இந்தியர்களை பாதிக்கக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.

ரூபியோ தனது தரப்பில், அமெரிக்க பொருளாதார வளர்ச்சிக்கு இந்தியர்கள் அளிக்கும் பங்களிப்பை புறக்கணிக்க முடியாது என்றும், அமெரிக்காவில் இந்தியர்கள் ₹1.70 லட்சம் கோடிக்கும் அதிகமாக முதலீடு செய்துள்ளதாகவும் கூறினார். சட்டவிரோத நுழைவுகளை கட்டுப்படுத்தும் நோக்கில் குடியேற்ற சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படுவதால் விசா நடைமுறைகளில் தாமதம் ஏற்படுவதாகவும், புதிய கொள்கை அமெரிக்க தேசிய நலனை அடிப்படையாகக் கொண்டது; இந்தியர்களை குறிவைத்தது அல்ல என்றும் அவர் தெரிவித்தார். சட்டப்படி வர விரும்புவோர் எப்போதும் வரவேற்கப்படுவார்கள் என்றும் கூறினார்.