சென்னையில் ஞாயிற்றுக்கிழமை சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த அதிமுகவைச் சேர்ந்த மூன்று எம்எல்ஏக்கள், பின்னர் முதல்வர் விஜயை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
வேலுமணி கோஷ்டி ஆதரவாளர்கள் என குறிப்பிடப்படும் மதுராந்தகம் மரகதம் குமரவேல், தாராபுரம் சத்யபாமா, பெருந்துறை ஜெயக்குமார் ஆகியோர் தங்களின் ராஜினாமா கடிதங்களை சபாநாயகர் ஜேசிடி பிரபாகரிடம் அளித்தனர்.
கடிதங்களை ஒரு மணி நேரத்தில் ஆய்வு செய்து, விதிகளின்படி இருப்பதாகக் கூறி ராஜினாமாவை ஏற்றுக் கொண்டதாக சபாநாயகர் அறிவித்தார்.
ராஜினாமா கடிதங்களை அளித்த பின், மூவரும் தவெக அமைச்சர் ஆதவை அவரது அலுவலகத்தில் சந்தித்தனர். அங்கு அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி வரவேற்பு அளிக்கப்பட்டதுடன், தவெகவின் உறுப்பினர் அடையாள அட்டையும் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. சபாநாயகர் அதிகாரப்பூர்வமாக ராஜினாமா ஏற்றுக் கொண்டதாக அறிவித்த 20 நிமிடங்கள் கழித்து அவர்கள் அமைச்சர் அறையிலிருந்து வெளியே வந்ததாகவும், பின்னர் முதல்வரை சந்தித்த சந்திப்பு 5 நிமிடங்களுக்கு மேல் நீடித்ததாகவும் கூறப்பட்டது.
இதற்கிடையில், அதிமுக எம்பி இன்பதுரை வெளியிட்ட அறிக்கையில், சபாநாயகர் அறிவிப்புக்கு முன்பே அமைச்சர் ஆதவை அவசரமாக சந்தித்ததும், மிக வேகமாக கட்சியில் இணைத்து அடையாள அட்டை வழங்கியதும் திட்டமிட்ட நடவடிக்கை எனக் கூறி, இதை “குதிரை பேரம்” என குற்றம்சாட்டினார்.





