திருவனந்தபுரம்: சபரிமலை தங்கத் திருட்டு வழக்கில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும், கட்சி பேதமின்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கேரள தேவஸ்வம் போர்டு அமைச்சர் முரளிதரன் தெரிவித்துள்ளார்.
பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலின் துவாரபாலகர் சிலைகளில் இருந்து தங்கம் திருடப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் உன்னிகிருஷ்ணன் போத்தி முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், முன்னாள் தேவஸ்வம் போர்டு அதிகாரிகள் சிலர் இந்த திருட்டுக்கு உடந்தையாக இருந்ததாகவும் விசாரணையில் கண்டறியப்பட்டதாக கூறப்படுகிறது. முந்தைய இடது ஜனநாயக முன்னணி அரசு சிலரை காப்பாற்ற முயன்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்ததால், விவகாரம் கேரள அரசியலில் பெரும் சர்ச்சையாக மாறியது.
புதிதாக பதவியேற்ற முதல்வர் சதீஷன் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி அரசு இந்த விவகாரத்தை தீவிரமாக கையில் எடுத்துள்ளதாகவும், எஸ்.ஐ.டி. அறிக்கை கிடைத்தவுடன் நடவடிக்கைகள் மேலும் தீவிரமாகும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
இதற்கிடையில், சுகாதாரத் துறையையும் கவனிக்கும் முரளிதரன், எபோலா வைரஸ் பரவல் குறித்து மக்கள் அச்சமடைய தேவையில்லை என கூறி, கேரளா முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும், வெளிநாடுகளில் இருந்து வருபவர்களை கண்காணிக்க விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களில் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார்.





