தற்போது நிலவும் “இக்கட்டான” உலகச் சூழலைக் கருத்தில் கொண்டு, அந்நியச் செலாவணியைச் சேமிப்பதில் மக்கள் கவனம் செலுத்த வேண்டும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கேட்டுக் கொண்டார். மும்பையில் SIDBI ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் அவர் இதை தெரிவித்தார்.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்வதால் பொதுமக்களைப் பாதுகாக்க, பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மத்திய கலால் வரி லிட்டருக்கு ரூ.10 குறைக்கப்பட்டதாக அவர் கூறினார். இதனால் 2026ஆம் ஆண்டில் அரசுக்கு ரூ.1 லட்சம் கோடிக்கும் அதிகமான வருவாய் இழப்பு ஏற்படும் என்றும் தெரிவித்தார்.
இந்தியாவின் வளர்ச்சிப் பயணம் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் (MSME) இல்லாமல் முன்னேற முடியாது எனக் கூறிய அவர், இந்நேரத்தில் SIDBIயின் பங்கு மேலும் முக்கியத்துவம் பெறுவதாக சுட்டிக்காட்டினார்.
மேற்காசிய நெருக்கடி என்பது ராஜதந்திர அல்லது புவிசார் அரசியல் பிரச்னை மட்டுமல்ல; அது வணிகங்களுக்கும் சாதாரண மக்களுக்கும் எரிபொருள் விலை உயர்வு மற்றும் மூலப்பொருள் பற்றாக்குறை போன்ற பாதிப்புகளை உருவாக்கக்கூடும் என்றார். மக்களைப் பாதுகாப்பது, MSMEக்களை ஆதரிப்பது, ஏற்றுமதியாளர்களை பாதுகாப்பது ஆகியவை அரசின் அணுகுமுறையாக இருப்பதாகவும் கூறினார்.
கச்சா எண்ணெய், உரங்கள் மற்றும் தங்கத்தின் அதிகப்படியான மற்றும் நிலையற்ற விலை நாட்டின் வெளிப்புற பொருளாதாரத்தில் சவால்களை உருவாக்குகிறது; இவற்றுக்கான கட்டணம் அந்நியச் செலாவணியில்தான் செலுத்த வேண்டியதாக இருப்பதால், அந்நியச் செலாவணியை முடிந்தவரை சேமிக்க வேண்டும் என்ற பிரதமரின் அழைப்பு மிகவும் முக்கியம் என அவர் வலியுறுத்தினார்.





