சென்னை: அதிமுக எம்எல்ஏக்கள் மரகதம் குமரவேல், சத்யபாமா, ஜெயக்குமார் ஆகிய 3 பேரின் ராஜினாமா கடிதங்கள் ஏற்கப்பட்டுள்ளதாக சட்டமன்ற சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் தெரிவித்தார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒரு எம்எல்ஏ ராஜினாமா அளிக்கும் போது காரணம் சொல்ல வேண்டிய கட்டாயம் இல்லை என்றார். “இன்றிலிருந்து பதவியிலிருந்து விலகுகிறேன்” என்ற பொருள் தெளிவாக இருந்தால், விதிகளுக்கு உட்பட்டு அதை ஏற்றுக் கொள்ள முடியும் என்றும் கூறினார்.

சபை விதி 21-ஐ மேற்கோள் காட்டிய சபாநாயகர், பதவி விலக விரும்பும் உறுப்பினர் குறிப்பிட்ட படிவத்தில் தம் கைப்பட எழுதி கையொப்பமிட்டு சபாநாயகருக்கு தெரிவிக்க வேண்டும் என்றார். அந்த விதிப்படி 3 பேரின் கடிதங்கள் இருந்ததால் உடனடியாக ஏற்றுக் கொண்டதாகவும் தெரிவித்தார்.

மேலும், கட்சி மாறி ஓட்டு போட்டதாக கூறி அளிக்கப்பட்ட மனுக்கள் தனது பரிசீலனையில் உள்ளதாகவும், உரிய நேரத்தில் விதிகளின் படி நடவடிக்கை எடுத்து அறிவிப்பதாகவும் கூறினார். அதிமுக எம்எல்ஏக்கள் 5 பேர் அளித்துள்ள கடிதங்கள் குறித்து, அவை மன்னிப்பு கடிதங்களா என்பதைக் குறித்து இன்னும் முழுமையாக ஆய்வு செய்யவில்லை; விதிகளின் படி பார்த்து முடிவை அறிவிப்பேன் என்றார்.

தபால் மூலம் அனுப்பப்படும் எந்த ராஜினாமா கடிதமும் ஏற்கப்படாது; நேரில் வந்து கைப்பட எழுதிக் கொடுத்தால் மட்டுமே ஏற்றுக் கொள்வோம் என்றும் அவர் விளக்கினார். அதிமுகவின் கொறடா யார் என்பது தொடர்பாகவும் ஆய்வு நடந்து வருவதாக கூறிய அவர், இதற்கென காலக்கெடு இல்லை; சட்டம் மற்றும் விதிகளின் படி உரிய நேரத்தில் முடிவெடுப்பேன் என்றார்.