தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. நாளை (மே 26) எட்டு மாவட்டங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
வானிலை அறிக்கையில், தென்மேற்கு வங்கக்கடல், தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகள் வழியாக வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக மாநிலத்தின் சில பகுதிகளில் மழைச் செயல்பாடு அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று (மே 25) நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல், பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும்.
நாளை (மே 26) கோவை, திருப்பூர் மாவட்டங்களின் மலைப்பகுதிகள் உள்ளிட்ட நீலகிரி, ஈரோடு, சேலம், தேனி, திண்டுக்கல் மற்றும் கன்னியாகுமரி ஆகிய 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல், பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மே 27 முதல் மே 29 வரை தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல், பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், மே 29 வரை அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் காரணமாக கடலோர தமிழகத்தின் சில இடங்களில் அசவுகரியம் ஏற்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 40–50 கி.மீ வேகத்தில், இடையிடையே 60 கி.மீ வரை சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.





